பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் புத்தளம் மேல் நீதிமன்றுக்கு பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது அந்த நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
அவருக்குப் பிணை வழங்குவதற்கு இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்து நீதிபதி குறித்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.
இந்நிலையில், இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தத நிலையில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அவரது பிணைக் கோரிக்கையை ஆட்சேபிக்கப் போவதில்லை என்று சட்டமா அதிபர் அண்மையில் மன்றுக்குத் தெரியப்படுத்தி இருந்த நிலையில், அவருக்கு இன்று பிணை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமைக்காக அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 18 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.