முக்கிய செய்திகள்

ஈழத்துப் பத்திரிகை உலகை துணிச்சலுடன் தூக்கி நிறுத்தியவர். ம.வ.கானமயில்நாதன். யாழ் ஊடக மன்றம் இரங்கல்.

நெருக்கடி காலத்திலும் தமிழ் பத்திரிகை உலகை கம்பீரமாக துணிச்சலுடன் வழிநடத்தியவர் வ.அ.கானமயில்நாதன் தமிழிற்கும் தமிழர்களுக்கும் பத்திரிகைத்துறையில் இவர் செய்த சேவை என்றும் மறக்க முடியாது.என யாழ் ஊடக மன்றம் இரங்கல் வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ம.வ.கானமயில் நாதன் 1942 ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி பிறந்தார்.ஒய்வு பெற்ற நிலையிலும் ஊடகப் பணியைத் தொடர்ந்த இளைஞன் என்றால் மிகையல்ல.

அந்தளவிற்கு தனது வாழ்நாள் முழுவதையும் பத்திரிகைக்காக அர்பணித்தது மாத்திரமன்றி ஈழத்து பத்திரிகை ஜாம்பவான்கள் என்று குறிப்பிடத்தக்க வீரகேசரியின் ஆசிரியர் எஸ்.கோபாலரட்ணம், தினகரன் பத்திரிகை ஆசிரியர் சிவகுருநாதன், தினபதி பத்திரிகை ஆசிரியர் சிவநாயகம் ஆகியோரின் வரிசையில் தன்னையும் தடம்பதித்தார்.

தனது ஊடக பயணத்தினை வீரகேசரி ஆசிரியர் பீடத்தில் ஆரம்பித்து, தினபதி பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றிய போது தினபதி பத்திரிகை அரசினால் தடை விதிக்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் பத்திரிகை ஒன்றை நடாத்த வேண்டிய தேவை எழுந்தபோது 1985ஆம் ஆண்டு உதயன் பத்திரிகை உருவாக்கப்பட்டு, அன்றிலிருந்து தொடர்ச்சியாக 36 வருடங்கள் பத்திரிகைத் துறையில் பிரதம ஆசிரியராக தனது ஊடகப் பணியில் அசைக்க முடியாத முத்திரையை பதித்தார்.

இறுதியாக காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திலும் பங்களித்தார்.
சிறந்த வழிகாட்டியாகவும் பண்பாளனாகவும் தன்னை நிலைநிறுத்திய பத்திரிகை ஆசான் இவர்.

ஈழத்து பத்திரிகை வரலாற்றிலேயே தொடர்ச்சியாக ஆசிரியராக இருந்து நெருக்கடியான போர்ச் சூழலிலும் ஊடக அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தனது இலக்கில் சிறிதும் தடம் மாறாது இன்றுவரை பயணித்துக்கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர் அ.வ.கானமயில்நாதன் ஊடகப்பரப்பிலுள்ள இளையோருக்கு ஓர் எடுத்துக்காட்டு எனலாம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அவரது உற்றார் உறவினர் நண்பர்களுக்கு யாழ். ஊடக மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்.தர்மினி

Related Articles

Leave a Reply

Back to top button