ஆடுகளத்தில் வாக்குவாதம் : இலங்கை வீரர் குமாரவுக்கும் பங்களாதேஷ் வீரர் தாஸுக்கும் அபராதம்
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் அபு தாபியில் ஞாயிறன்று நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியின்போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்ட இலங்கையின் லஹிரு குமாரவுக்கும் பங்களாதேஷின் லிட்டன் தாஸுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
அப் போட்டியில் பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்படட 172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 7 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
லிட்டன் தாஸ் 16 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது லஹிரு குமாரவினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
‘லிட்டன் தாஸை ஆட்டமிழக்கச் செய்தபின்னர் லஹிரு குமார அவரை நோக்கி சைகை செய்துகொண்டு ஏதோ சொல்லியவாற சென்றார்.
இதனால் ஆத்திரவசப்பட்ட லிட்டன் தாஸும் ஆக்ரோஷமாக செயற்பட்டார்’ என ஐசிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
‘பந்துவீச்சாளர் குமாரவினால் ஆத்திரமூட்டப்பட்ட தாஸ் ஆக்ரோஷமாக நடந்துகொண்டவிதம் கிரிக்கெட் மகத்துவத்துக்கு எதிராக அமைந்தது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
லஹிர குமாரவுக்கு போட்டிக் கட்டணத்தில் 25 வீதம் அபாரதத்துடன் ஒரு தகுதிநீக்கப் புள்ளி விதிக்கப்பட்டது.
லிட்டன் தாசுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 வீத அபராதத்துடன் ஒரு தகுதிநீக்கப் புள்ளி விதிக்கப்பட்டது.
சுப்பர் 12 சுற்றில் நடப்பு சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளுடன் ஒரே குழுவில் இலங்கையும் பங்களாதேஷும் இடம்பெறுகின்றன.