ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வந்தாலும், அந்த எழுவரின் விடுதலை போராட்டத்திற்காக பலரும் போராடி வந்தாலும், பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவாகத் தான் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அரசியல் பிரபலங்களும், திரை உலக பிரபலங்களும் பேரறிவாளன் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தனது மகன் பேரறிவாளனை விடுதலை பெற வைக்க அற்புதம்மாள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அந்த அற்புதம் அம்மாளின் போராட்ட வாழ்க்கையை திரைப்படமாக இயக்க இருக்கிறார் வெற்றிமாறன்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என்று தமிழ் சினிமாவில் தனித்தடம் பதித்து வரும் வெற்றிமாறன் அற்புதம் அம்மாளின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்க இருப்பதாக சொல்லி இருப்பது தனி கவனம் பெற்றிருக்கிறது.
விடுதலை படத்தை அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கும் வெற்றிமாறன் அடுத்து அற்புதம்மாள் கதையை படமாக்க இருக்கிறார். அற்புதம் அம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. 32 ஆண்டுகளாக நடக்கும் அற்புதம் அம்மாளின் போராட்டத்தை காட்சிப்படுத்துவது என்பது ரொம்பவே சவாலானது. அதனால் அற்புதம் அம்மாளாக நடித்த இருப்பவரை பார்த்து பார்த்து தேர்வு செய்து இருக்கிறேன். அற்புதம் அம்மாளாக நடிக்க இருப்பவரை முடிவு செய்துவிட்டேன். அது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.