இலங்கையின் கடன் எல்லை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!
2020ம் ஆண்டின் 07ம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தில் கடன் பெறும் வரம்பை அதிகரிப்பதற்கான திருத்தம் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான பொது நிதி தொடர்பான குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கமைய, குறித்த சட்டத்தின் 2ம் சரத்து திருத்தப்படுகிறது. இதன்படி, 2,997 பில்லியனாக இருந்த கடன் எல்லை 3,397 பில்லியன் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக கடன் வாங்கும் வரம்பை அதிகரிப்பதற்கு ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் தேவை என நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல (S.R Attygalle) சுட்டிக்காட்டினார்.
2021ம் ஆண்டு எதிர்பார்த்த வருவாயைப் பெற முடியாமல் போனமை, குறைநிரப்பு செலவு அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன் சேவைகளை செலுத்துவதில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்பன இதற்குக் காரணம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கோவிட் 19 தொற்றுநோய்களின் போது நலன்புரிச் செலவினங்கள் அதிகரித்தமை, செலவினங்களை அதிகரிக்க வழிவகுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 200 பில்லியன் ரூபா கூடுதல் செலவினங்களுக்காக அண்மையில் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.