ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு விடாய்க்கால அணையாடை (சானிட்டரி நாப்கின்கள்) உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நிதி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதுடன், இதன் காரணமாக விடாய்க்கால அணையாடைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, உள்நாட்டு விடாய்க்கால அணையாடை உற்பத்திக்குத் தேவையான பாலிஎதிலீன் பிலிம்கள் மற்றும் பொலிப்ரோப்பிலீன் பிலிம்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட மூலப்பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் பேரில் சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்துடன் தொடர்புடைய பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்ய முடியும்.
உள்நாட்டு விடாய்க்கால அணையாடைகளின் விலை அதிகரிப்பு காரணமாக, அதனுடன் தொடர்புடைய பொருட்களின் மூலப்பொருட்களுக்கான வரிகளை நீக்குவதற்கு கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருந்தார்.