தமிழர்களின் கல்விப் பொக்கிசமாக விளங்கும் யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 19 மாணவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் என்னும் பெயரில் தெல்லிப்பழைக்கு அழைக்கப்பட்டு சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவதாக யாழ்.மாவட்ட மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளர் த.கனகராஜால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், யாழ்.பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, மாணவர் ஆலோசகர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகிய குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று சிரேஷ்ட மாணவர்களிடம் இருந்து புதுமுக மாணவர்களை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 18 மாணவர்கள் தற்காலிகமாக வகுப்பில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே பகிடிவதையில் ஈடுபட்ட ஒரு மாணவர் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்வாங்கப்பட்டு வகுப்புத்தடையில் உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வெளிப்படையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் 2 வருடத்திற்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.