நேற்று மாலை அமெரிக்கா உட்பட்ட சில நாடுகளின் தூதுவர்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலிமுகத்திடலில் நடந்த சம்பவம் தொடர்பில் கோபமாக கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உங்கள் நாடுகளில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் இப்படித்தான் கருத்து கூறுவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
”உரிய அதிகாரிகளுடன் உண்மை நிலையை உறுதிப்படுத்தாமல் வெறுமனே சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு என்னைக் கண்டித்து செய்திகள், தகவல்கள் வெளியிடுவது எப்படிச் சரியாகும்?” – என்றும் அவர்களைப் பார்த்து ஜனாதிபதி கேட்டார்.
சமூக ஊடகங்களை மட்டுமே நம்பிச் செய்திகளை, குறிப்புகளை, அறிக்கைகளை வெளியிடுகின்றீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீங்கள் வெளியிட்ட கருத்துகளால் இலங்கைக்கு சர்வதேச அளவில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது எனவும் உங்கள் அனைவரின் மீதும் அதிருப்தியில் உள்ளதாகவும் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார்.
அமெரிக்கத் தூதுவரைப் பார்த்து, “இப்படியான ஆக்கிர்மிப்பு வொஷிங்டனில் நடந்தால் அதை உங்கள் நாடு அனுமதிக்குமா?” – என்று கேட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “”உங்கள் நாட்டின் சரித்திரத்தை ஆபிரகாம் லிங்கனிலிருந்து படித்துக்கொண்டு வாருங்கள்” என்று கூறியதாகவும்
ஜனாதிபதி செயலகம் தொடர்பாக உண்மையில் நடைபெற்ற விடயங்களை அவர் தூதுவர்களுக்குத் தெளிவுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை நிலையை அவர்களிடம் எடுத்துக் கூறியதாகவும் நீதிமன்ற உத்தரவைக் கையளிக்கச் சென்றபோது போராட்டக்காரர்கள் மிக மோசமாக நடந்து கொண்டதால் வேறு வழியின்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூதுவர்களிடம் நேரடியாகத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
(செய்தி மூலம்: ‘காலைக்கதிர்’ – 23.07.2022)