இலங்கைசெய்திகள்

ஆட்சி மாறியதும்
தண்டனை உறுதி
மரிக்கார் எம்.பி. தெரிவிப்பு

“நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தி அரசு வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டது. நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னர், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையை நிச்சயமாக வழங்குவோம்.”

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் எரிசக்திப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான நேற்றைய விவாதத்தில், அக்கட்சியின் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட முட்டைத் தாக்குதல் தொடர்பிலும் பலர் உரையாற்றியிருந்தனர்.

இதில் மரிக்கார் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியின் இல்லத்தின் முன்பாக ஹிருணிகா போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவரது வீட்டுக்கு முன்பாக குண்டர்கள் சென்று சத்தமிட்டனர்.

இதன் பின்னர் குண்டர்களோடு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்குச் சென்றிருந்த ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையிலான குழுவினர், கட்சியின் அலுவலகத்தின் மீது அழுகிய முட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

ஹிருணிகா முட்டை வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்கவில்லை. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வையே ஹிருணிகா கோரியிருந்தார்.

ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக சத்தம் போட்டதாலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கு முன்பாக சென்று சத்தமிட்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார். இதுதான் தற்போதைய அரசு” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button