இலங்கைசெய்திகள்

மூவினத்தவர்களையும் ஏமாற்றுகின்றார் கோட்டாபய! – எதிரணி குற்றச்சாட்டு

“நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமிழ், முஸ்லிம் மக்களை மட்டுமன்றி தன்னை அரியணை ஏற்றிய சிங்கள மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றார். இம்முறை அவர் ஆற்றிய சுதந்திர தின உரை இதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.”

-இவ்வாறு எதிரணிகளின் தலைவர்களான சஜித் பிரேமதாஸ (ஐக்கிய மக்கள் சக்தி), இரா.சம்பந்தன் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), அநுரகுமார திஸாநாயக்க (ஜே.வி.பி.) ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய தலைமையிலான அரசு நாட்டை நாசமாக்கிக்கொண்டிருக்கின்றது.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரியணை ஏறிய ஜனாதிபதி கோட்டாபய, இன்று தப்பிப்பிழைப்பதற்காக மூவின மக்களையும் ஏமாற்றும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

மூவின மக்களையும் பிரித்து அதில் சுயலாப அரசியல் தேடுவதிலேயே இந்த அரசு குறியாகவுள்ளது.

ஜனாதிபதியின் சுதந்திர தின உரை வேடிக்கையாக உள்ளது. மக்களுக்கான உரிமைகளைத் தட்டிப் பறித்துவிட்டு அவர்களைப் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகின்றார். இது எந்த வகையில் நியாயமானது?

அடிமை வாழ்க்கை வாழ இந்த நாட்டு மக்கள் எவரும் தயாராகவில்லை. இந்த அரசை வீட்டுக்கு அனுப்பவதே மக்களின் விருப்பம். அதை மக்கள் விரைவில் செய்வார்கள்” – என்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button