உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க முயற்சித்தால் அது இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பெரிய போராக இருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
உக்ரைனில் வசிக்கும் அமெரிக்க பொதுமக்கள், எப்போதும் புறப்பட தயாராக இருக்கவேண்டும் என்று அந்த நாட்டு தூதரகம் வலியுறுத்தி உள்ளது.
உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வருவதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயன்று வருகிறது.
அந்த வகையில், உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்ய இராணுவ முற்றுகைக்கு தயாராகி வருவதால் எந்த நேரத்திலும் போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனையடுத்தே அமெரிக்க தூதரகம், தமது குடிமக்களை இப்போதே புறப்பட தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், உக்ரைனுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் நிச்சயமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும். ரஷ்யா,உக்ரைன் மீது படையெடுத்தால் அது இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரும் போராக இருக்கும். இது நடந்தால் ரஷ்யா மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும்” என எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.