“நாட்டு மக்கள் அனைவரையும் பிச்சைக்காரர்களாக மாற்றுவதற்கு முயலும் இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும்.”
- இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவைக் காரணம் காட்டி இந்த அரசு தப்பிப்பிழைக்க முயல்கின்றது.
எரிவாயு சிலிண்டர் வெடிப்பு பிரச்சினைக்கும் கொரோனாத் தொற்றுக்கும் என்ன தொடர்பு உண்டு?
மக்களை மடையர்களாக்கி ஆட்சியை முன்நகர்த்தலாம் என்று ராஜபக்சக்கள் கனவு காண்கின்றனர். இதற்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றிப் பிழைக்கும் இந்த அரசுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும்.
இல்லையேல் இந்த ஆட்சியில் மக்கள் அனைவரும் பிச்சைக்காரர்களாக மாறும் நிலைமை ஏற்படும்; வறுமையின் பிடியில் சிக்கி பரிதவிக்கும் நிலைமை உண்டாகும்” – என்றார்.