தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் , கொழும்பிலிருந்து நேரடியாக ரயில் மூலம் காங்கேசன்துறைக்கு எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்துள்ளதுடன் எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களுக்கு பெரும் சுமையாக அமைந்திருப்பதாகவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நீதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தற்போது கொழும்பிலிருந்து வடக்கிற்கான எரிபொருட்கள் பவுசர்கள் மூலமே காங்கேசன்துறையிலுள்ள எரிபொருள் விநியோக நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் வீண் செலவுகளும் கால தாமதங்களும் ஏற்படுகின்றன.
எனவே கொழும்பிலிருந்து நேரடியாக ரயில் மூலம் காங்கேசன்துறைக்கு எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் செலவுகள் குறைவதுடன் காலதாமதமும் தவிர்க்கப்படும்.
அதேவேளை எரிபொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன. இது மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
அரசு தமக்கு எதாவது நிவாரணத்தை வழங்கினால் மட்டுமே எரிபொருள் விலை அதிகரிப்பை தவிர்க்கலாம் என அமைச்சர் உதய கம்பன் பில தெரிவித்துள்ளார்.
எனவே அரசு அமைச்சுக்கு ஏதாவது நிவாரணங்களை வழங்கி எரிபொருள் விலைகளை அதிகரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை காற்றாலை மினி நிலையம் பிரதம மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது பிரதமர் அனுராதபுரம், வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென வாக்குறுதியளித்திருந்தார்.
வுவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இதுவரை எந்தவொரு நியமனம் வழங்கப்படவில்லை.
அனுராதபுரத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடந்தது. எனவே பிரதமரின் வாக்குறுதி பொய்யா என்ற கேள்வி எழுந்துள்ளது . எனவே இது தொடர்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.
இங்கு பல குடியேற்ற கிராமங்கள் உள்ளன. இவ்வாறான கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை இல்லை. இவ்வாறான கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.