மன்னார் மாவட்டத்தில் தொடர் மழையால் 98 குடும்பங்கள் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக 98 குடும்பங்களைச் சேர்ந்த 361 நபர்கள் பாதிக்கப்பட்டு நான்கு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று(9) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. புழுதி வேளாண்மையில் ஈடுபட்டிருந்த பல வயல் நிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2580 ஏக்கர், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 990 ஏக்கர் , நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 180 ஏக்கர் மற்றும் மன்னார் நகரப் பிரதேச செயலாளர் பிரிவில் 560 ஏக்கர் புழுதி வேளாண்மையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமாக 5700 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட 13 பாடசாலைகளும், மடு வலயத்தில் உள்ள 2 பாடசாலைகளும் மொத்தமாக 15 பாடசாலைகள் மன்னார் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை 4 பாடசாலைகளைத் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களாக மாற்றி மக்களைத் தங்க வைத்துள்ளோம்.
எழுத்தூர் பகுதியில் 41 குடும்பத்தைச் சேர்ந்த 162 நபர்களும், சௌத் பார் கிராமத்தில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 12 நபர்களும், விடத்தல் தீவு கிழக்குப் பகுதியில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 நபர்களும், தலைமன்னார் பியர் பகுதியில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 101 நபர்களும், தலைமன்னார் கிராமத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 நபர்களும், செல்வ நகர் கிராமத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 நபர்களுமாக 98 குடும்பங்களைச் சேர்ந்த 361 நபர்கள் தற்போது வரை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைச் சுகாதார திணைக்களத்தின் உதவியுடன்,சுகாதார நடை முறைகளுக்கு ஏற்ப பிரதேச செயலகங்கள் ஊடாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தின் பல கிராமங்கள் இவ்வாறு வெள்ள நிலைமையை எதிர் நோக்கியுள்ள போதிலும், அவர்கள் இடம் பெயர்ந்து முகாம்களுக்குச் செல்லாது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
கிராமங்களுக்குள் சென்றுள்ள வெள்ள நீரை வெளியேற்ற நகர சபை,பிரதேச சபை, பிரதேச செயலகங்கள்,மாவட்டச் செயலகம்,நீர்ப்பாசன திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களுடன் இணைந்து நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் மழை தொடர்ச்சியாகப் பெய்து வரும் பட்சத்தில் குறித்த நடவடிக்கை எமக்கு சவாலாக உள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்வதற்கான எதிர்வு கூறல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானத்துடன் இருப்பதுடன், இரவு வேளைகளில் அதி கூடிய மழை பெய்யும் பட்சத்தில் கிராம அலுவலகர்களுடன் தொடர்பு கொண்டு அருகில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் சென்று பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். கிராம அலுவலகர் ஊடாக பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடனும் தொடர்பு கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.