நேசம் – பிரபாஅன்பு!!
வலைக்குள் அகப்பட்ட மீன்களின் நிலை கண்டு
துடித்துக்கொண்டிருப்பவளை
உன் நினைவுகளில் இருந்து மீண்டெழுவதற்கு
பிணை வழங்காமலே
உன்னை அடிக்கடி மறந்து விடுகிறேன் என்று
குறை கூறிக்கொண்டிருக்கிறாயே
அதீதங்கள் எல்லாமே ஏமாற்றத்தில் முடிந்துவிடும் என்று
எச்சரிக்கை செய்ததும் நீதானே அன்பே
எப்போதும் குளிராத மழையும்
சுடாத வெயிலும் வேண்டும் என்று
அடம்பிடிக்கும் உன்னை
அன்பென்ற நேச குடுவையில் இருத்தி
சாமரம் வீசிக்கொண்டிருப்பதை மறந்துவிட்டாயா
உனக்காக எழுதி கிறுக்கி கிழித்த காகிதத்திற்குள்
உந்தன் நினைவுகளை விதைத்துவிட்டு
அறுவடை செய்ய காத்திருக்கிறேன்
மரணத்தின் வாசனை என்னை துரத்தியபோது
உன்னை பிரிந்துவிடுவேனோ என்ற ஏக்கத்தில் கால்கள் இடற
கன்னக்குழியோரம் ஊடுருவி வழியும்
நீரைத் துடைத்தபடி ஓடிவந்தேனே
அன்று உன்னிடம்
என் நேசத்தின் நேசமே
ஐப்பசி மாதத்தில் இடைவிடாது பொழியும்
மழைத்துளிகளின் சத்தத்தோடு
நீ எனக்காக எழுதிய புதுக்கவிதையின் கிறுக்கல்களை
நான் இப்பொழுதும்
படித்துக்கொண்டிருக்கிறேன்
என் ஆயுள்ரேகை உள்ளவரை
ஏழுகடல் தாண்டியும் சிட்டுக்குருவிபோல்
பறந்தோடி வருவேனே உன்னிடம்
உன்னை மறந்திடுவேன் என்று நினைத்தாயா
நீ எந்தன் உயிரல்லோ….