வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பணம் மோசடி செய்பவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தொழில் வழங்குவதாக கூறி பண மோசடி இடம்பெறுவதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் குறித்த நாடுகளுக்காக நடைமுறைப்படுத்தியுள்ள ஆட்சேர்ப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக பண மோசடி செய்யப்பட்டு வருவதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
தென் கொரியாவில் வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைள் பணியகத்தால் மாத்திரமே முறையாக மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய, ஜப்பானில் வேலைவாய்ப்புகள் ஆட்சேர்ப்பு பணியகம் மற்றும் பல உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்களால் மாத்திரே மேற்கொள்ளப்படுவதாக பணியகம் அறிவித்துள்ளது.
இதே முறையே இஸ்ரேல் நாட்டிற்கு செல்லவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களினால் செலவுகள் மற்றும் பணியகப் பதிவுக் கட்டணங்கள் மாத்திரமே அறிவிடப்படுகின்றது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு முறைகளை பயன்படுத்தி இவ்வாறான தொழில் மோசடிகள் மேற்கொள்ளப்படும் நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு பணியகம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.