ஆப்கானிஸ்தான், இந்தியாவின் கனவுகள் கலைந்தன! நியூசிலாந்து உள்ளே!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 4 ஆவது அணியாக அரை இறுதியில் விளையாடுவதற்கு குழு 2 இலிருந்து நியூஸிலாந்து தகுதிபெற்றுக்கொண்டது.
அபு தாபியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான குழு 2 க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலம் நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுக்கொண்டது.
இதனை அடுத்து அரை இறுதியில் விளையாடுவதற்கான இந்தியாவினதும் ஆப்கானிஸ்தானினதும் எதிர்பார்ப்பு தகர்க்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 18.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அரை இறுதியில் விளையாடுவதற்கான தகுதியை மாத்திரம் குறிவைத்து விளையாடிய நியூஸிலாந்து. நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி தனது இரண்டு இலக்குகளையும் சிரமிமின்றி அடைந்தது.
டெரில் மிச்செல் (17), மார்ட்டின் கப்டில் (28) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
மொத்த எண்ணிக்கை 57 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த அணித் தலைவர் கேன் வில்லிம்சனும் டெவன் கொன்வேயும் நிதானத்துடன் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்தனர்.
கேன் வில்லியம்சன் 40 ஓட்டங்களுடனும் டெவன் கொன்வே 36 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் நஜிபுல்லா ஸத்ரான் தனி ஒருவராக பிரகாசித்ததன் பலனாகவே ஆப்கானிஸ்தான் ஓரளவு கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
இந்த மொத்த எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஓட்டங்களை நஜிபுல்லா ஸத்ரான் பெற்றமை விசேட அம்சமாகும்.
6 ஆவது ஓவரில் ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 19 ஓட்டங்களாக இருந்தபோது களம்புகுந்த நஜிபுல்லா ஸத்தரான் 48 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 73 ஓட்டங்களைக் குவித்த அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்தார்.
இவரை விட குல்பாதின் நய்ப் (15), அணித் தலைவர் மொஹமத் நபி (14) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் ட்ரென்ட் போல்ட் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.