வெற்றியை தென்னாபிரிக்காவுக்கு தாரைவார்த்தது இலங்கை !
இலங்கை அணிக்கு எதிராக ஷார்ஜா விளையாட்டரங்கில் இன்று (30) நடைபெற்ற குழு 1 க்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி முதலில் துடுப்படுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பதும் நிசங்க 70 ஓட்டங்களையும் சரித்த அசலங்க 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் தப்ரைஸ் சம்ஷி மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அன்ரிஜ் நொர்ட்ஜே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், 143 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி அணித்தலைவர் பவுமாவின் நிதான ஆட்டத்துடன் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்து 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக அணித் தலைவர் பவுமா 46 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ஹெட்ரிக் சாதனை படைத்த வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சாமிர 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக சம்ஷி தெரிவு செய்யப்பட்டார்.