அவுஸ்திரேலியாவிடம் மண்டியிட்டது இலங்கை !
இலங்கைக்கு எதிராக துபாய் விளையாட்டரங்கில் இன்று (28) இரவு நடைபெற்ற குழு 1க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 2 சுற்று கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இலங்கை அணியின் முன்வரிசையில் ஏற்படும் சரிவுகள் அதன் தோல்விக்கு மீண்டும் காரணமாக அமைந்தது. ஆரம்ப வீரர்களில் ஒருவர் பிரகாசித்தால் மற்றையர் சோடை போகும் கதை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இரண்டு வீரர்களும் சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுக்காமல் போவதால் அடுத்துவரும் துடுப்பாட்ட வீரர்கள் நெருக்கடிக்கு மத்தியில் துடுப்பெடுத்தாட வேண்டி ஏற்படுகின்றது.
இந்தக் குறையை அணி முகாமைத்துவம் நிவர்த்தி செய்யாவிட்டால் இறுதிச் சுற்று வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்காமல் போகலாம்.
இதேவேளை, டோவிட் வோர்னர், அணித் தலைவர் ஆரொன் பின்ச் ஆகிய இருவரும் 41 பந்துகளில் ஆர்ம்ப விக்கெட்டில் பகிர்ந்த 70 ஓட்டங்கள் அவுஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு பெரிய அளவில் உதவியது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெத்தும் நிஸ்ஸன்க தவறான அடி தெரிவினால் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
குசல் பெரேராவும் சரித் அசலன்கவும் பொறுமை கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அசலன்க 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். சற்று நேரத்தில் குசல் பெரேராவும் 35 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
அவிஷ்க பெர்னாண்டோ (4), வனிந்து ஹசரங்க (4) ஆகிய இருவரும் மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி 4 ஓட்டங்களுடன் வெளியேறினர்.
பானுக்க ராஜபக்ஷவும் தசுன் ஷானக்கவும் 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அணியை கட்டி எழுப்ப முயற்சித்தனர். ஆனால் 40 ஓட் டங் களைப் பகர்ந்திருந்தபோது ஷானக்க 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பானுக்க ராஜபக்ஷ 33 ஓட்டங்களுடனும் சாமிக்க கருணாரட்ன 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் அடம் ஸம்பா 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன், மிச்செல் ஸ்டார்க் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
155 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 17 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 155 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
முதலாவதாக ஆட்டமிழந்த ஆரொன் பின்ச் 23 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 37 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டமிழந்தார். துடுப்பாட்ட வரிசையில் தரமுயர்த்தப்பட்ட க்ளென் மெக்ஸ்வேல் ஆடுகளம் நுழைந்த சொற்ப நேரத்தில் 5 ஓட்டஙகளுடன் வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டேவிட் வோர்னர் 42 பந்துகளில் 10 பவுண்ட்றிகளுடன் 75 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஸ்டீவன் ஸ்மித்துடன 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை அண்மிக்கச் செய்தார்.
தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை உறுதி செய்த ஸ்டீவன் ஸ்மித் 28 ஓட்டங்களுடனும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 2விக்கெட்களை விழ்த்தினார்.
ஆட்டநாயகன் அடம் ஸம்பா