இந்தியாஇலங்கைசினிமாசெய்திகள்

“யொஹானி தமிழக இசைத்துறையில் பாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது”

“மெனிகே மகே ஹிதே” என்ற பாடல் மூலம் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ள இலங்கை பாடகி யொகானி டி சில்வா, தமிழக திரை இசைத்துறையில் பாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் மாநிலபொதுச்செயலாளர் ராம ரவிக்குமார் இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“மெனிகே மகே ஹிதே” என்ற பாடல் சர்வதேச ரீதியில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ள நிலையில், அந்த பாடலை பாடிய யொகானி டி சில்வா மிகவும் அறியப்படும் நபராக மாறியுள்ளார்.

இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் தனது படத்தில் பாடல் ஒன்றும் பாடும் வாய்ப்பை யொஹானிக்கு வழங்கியிருந்தார். கடந்த 6ம் திகதி இந்தப் படத்தின் பாடலொன்று மும்பையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இதற்காக இலங்கையிலிருந்து மும்பை வந்திருந்தார் பாடகி யொஹானி. அவரை வைத்து அந்தப் பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் பதிவு செய்துள்ளார். இந்த பாடல் பதிவின் போது, பாடலை எழுதிய மதன் கார்க்கியும் உடனிருந்தார்.

ஹாரிஸ், மதன் கார்க்கி, யொஹானி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை ஹாரிஸ் ஜெயராஜ் இணையத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த செய்தி வெளி உலகுக்கு தெரிய வந்தது.

இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநிலபொதுச்செயலாளர் ராம ரவிக்குமார் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“மெனிகே மகே ஹிதே” பாடல் உலகம் முழுவதும் மிகவும் பிரபல்யம் அடைந்திருக்கலாம். அந்த காரணத்திற்காக அவர் தமிழக இசைத்துறையில் வந்து பாடுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஈழத்தின் இசைப்பாடகியாக இருந்த இசைப்பிரியா போன்றவர்கள் மிகவும் கொடூரமான முறையில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

பல ஆயிரம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன. இதற்கெல்லாம் காரணமாக இருந்தவரின் மகள் தமிழக இசைத்துறையில் பாடுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Related Articles

Leave a Reply

Back to top button