வெளிநாடு செல்லும் நோக்கில் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் நிலைமையில், பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தற்போது அந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டை பெற கொழும்பில் உள்ள குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்திற்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர்,
தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் இருந்து இதுவரை இணையத்தளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வர முடியும்.
இதற்கு அமைய விண்ணப்பதாரிகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். எனினும் தற்போது தினமும் கிடைக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிக்கும் 10 முதல் 12 நாட்களுக்கு விண்ணப்பத்தை நேரில் கையளிக்க நாங்கள் திகதி ஒன்றை வழங்குவோம். எனினும் தினமும் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த விண்ணப்பங்களை ஏனைய நாட்களை போல் தற்போது ஈடு செய்ய முடியவில்லை. விண்ணப்பதாரிகளில் பெரும்பாலானவர்கள் இளையோர். இது அசாதாரணமான அதிகரிப்பு. இதற்கு முன்னர் போர் நடைபெற்ற காலத்தில் அதிகளவானவர்கள் கடவுச்சீட்டை விண்ணப்பிக்க வந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள்.
எனினும் தற்போது நாடு முழுவதிலும் உள்ள இளைஞர், யுவதிகள், ஆச்சரியமான வகையில் தமக்கான கடவுச்சீட்டுக்களை பெற அதிகளவில் வருகின்றனர் என கூறியுள்ளார்.