ஊர்காவற்துறை கரம்பொன் மாசண்முகநாதன் பாடசாலையை அண்மித்த பகுதியில் அரசியல் கட்சியொன்றின் ஆதரவோடு தனிநபர் ஒருவரால் மதுபான விற்பனை நிலையமொன்று அமைக்கப்படவிருந்தது .
மேற்படி நாசகார செயற்பாட்டுக்கெதிராக தீவக சிவில் சமூக அமைப்பு உள்ளிட்ட பல பொது அமைப்புக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தன . இதற்கு எதிராக சில மாதங்களுக்கு முன்பு தீவகம் வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பு தீவக சிவில் சமூகத்தினரால் ( islands civil society ) எதிர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் தீவகம் வடக்கு பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் மேற்படி பொது அமைப்புக்களுக்கும் மதுபான வரி திணைக்களத்தினருக்கு மிடையிலான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றிருந்தது .
பொது அமைப்புக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக ஊர்காவற்துறையில் மதுபான விற்பனை நிலையம் அமைக்கும் முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது .
இக்கலந்துரையாடலில் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர்
திருமதி. ச. மஞ்சுளாதேவி , ஊர்காவற்துறை பொது சுகாதார பொறுப்பதிகாரி மருத்துவர் நந்தகுமார் , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.கனகையா , தீவக சிவில் சமூக பொருளாளர் கருணாகரன் குணாளன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற் (சின்னமணி ) , சிவநாதன் , மெலிஞ்சிமுனை கத்தோலிக்க தேவாயலய பங்குத்தந்தை ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் .