இலங்கைசெய்திகள்

மீண்டும் பிரதி சபாநாயகரானர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

நாடாளுமன்றம் இன்று (05.05.2022 ) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

நாடாளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற பிரதி சபாநாயருக்கான தேர்வில், சுயாதீன அணிகளின் சார்பில் களமிறக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வெற்றிபெற்று, பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 148 வாக்குகள் அளிக்கப்பட்டன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் களமிறங்கிய இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு ஆதரவாக வாக்குகள் 65 வழங்கப்பட்டன. 3 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இதன்போது, பிரதி சபாநாயகர் பதவிக்காக – நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் சார்பில், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எம்.பியும், முன்னாள் பிரதி சபாநாயகருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயர் முன்மொழியப்பட்டது.

சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வாவால், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயர் முன்மொழியப்பட்டது. அதனை சுசில் பிரேமஜயந்த எம்.பி., வழிமொழிந்தார்.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், பிரதி சபாநாயகர் பதவிக்கு எவரும் போட்டியிடவில்லை. ஆளுங்கட்சி ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை ஆதரிக்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சபையில் அறிவித்தார்.

இதனையடுத்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயர், பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவால் முன்மொழியப்பட்டது. இதனை எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல வழிமொழிந்தார்.

நண்பகல் 12. 28 மணியளவில் வாக்களிப்பு நிறைவுபெற்றது. சபாபீடத்தில் வைத்து , சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற செயலாளர், பிரதி செயலாளர்களின் பங்களிப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் ஒரு மணியளவில் தேர்தல் முடிவை சபாநாயகர், அறிவித்தார்.

இதன்படி சுயாதீன அணிகளின் சார்பில் களமிறங்கிய ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளையும், எதிரணி சார்பில் களமிறங்கிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் 65 வாக்குகளையும் பெற்றனர். அந்தவகையில் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவுசெய்யப்பட்டார்.

அதேவேளை, வாக்களிப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தான் யாருக்கு வாக்களித்தார் என்பதை காண்பிக்கும் வகையில், வாக்கு சீட்டை எதிரணி பக்கம் சிறிது நேரம் காண்பித்தார். பிரதமருக்கும் அந்த வாக்குச்சீட்டை காண்பித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் இந்த செயலை சபாநாயகர் கண்டித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி, மற்றும் விமல் வீரவன்ஸ ஆகியோர் வாக்களிப்பு வேளையில் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button