சிங்கள மக்களின் அதிகளவான வாக்குகளால் வெற்றி பெற்று அதே சிங்கள மக்களினால் இன்று வெறுத்து ஒதுக்கப்பட்டுவரும் கோட்டபாயவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் காப்பாற்றக்கூடாது என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுச்செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்தவும், தமிழ் மக்களின் மனதை வெல்லவுமே கோட்டபாய பேச்சுவார்த்தை என்று நாடகமாடுகிறார். கோட்டபாய அரசு ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்காது.
கோட்டாபயவின் இந்த நாடகத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் துணைபோகக்கூடாது. அவர்கள் கடந்தகாலச் சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு நிதானமாகச் செயற்பட வேண்டும்.
பேச்சு மேசையைக் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் சரிவரப் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்துக் கோட்டாபய அரசைக் காப்பாற்றும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாகவுள்ளது. ஆனால், தமிழர்களுக்குத் தீர்வை வழங்க இந்தக் கோட்டாபய அரசு ஒருபோதும் முன்வரமாட்டாது என்றார்.