புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையானது நீண்டகாலமாகவே இருள்சூழ்ந்து காணப்படுகின்றது . ஏற்கனவே அப்பகுதியில் 2016 ல் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நிதி ஒதுக்கீட்டில் தீவகம் தெற்கு பிரதேச செயலகத்தினரால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தபோதிலும் கடந்த இரண்டு வருடங்களாக அவை ஒளிரவில்லை .
இதன்காரணமாக நயினாதீவு நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் பயணிகள் பல இடையூறுகளை எதிர்நோக்கவேண்டியிருந்தது .
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் ஊர்காவற்துறை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி ( தீவகம் ) கிளையின் செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் அவர்களின் சொந்த நிதியான 125000 ரூபாயில் ஐந்து 150w LED மின்விளக்குகளும் , அவருக்கான பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டின் ஊடாக ஐந்து
30w மின்குமிழ்களும் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போதைய நெருக்கடி சூழ்நிலையிலும் மிக குறைந்தளவான வேலணை பிரதேச சபை ஊழியர்களின் ஒத்துழைப்பில் மின்விளக்குகள் பொருத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும்போது பாரந்தூக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலனின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.