இலங்கைசெய்திகள்

வீதி அபிவிருத்தியால் சிதைவடைந்த வீதி

“ஐ” ரோட் திட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படும் வீதியின் பணிகளில் ஈடுபடும் கனரக வாகனங்களுக்கான தரிப்பிடம் மற்றும் கல் மணல் உட்பட கட்டுமாணப் பொருட்கள் சங்கானை வைத்தியசாலைக்கு அண்மையாகவுள்ள செங்கற்படை மஹாதேவப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ளதால் வீதிகள் மீண்டும் மோசமான நிலைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானை வைத்தியசாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வீதிகள் சில வருடங்களாக “ஐ” ரோட் திட்டம் மூலம் சீர்செய்யப்பட்டன.

தற்போது அங்கு வேலைகள் நிறைவுபெற்றாலும் அங்கிருந்து பல கிலோமீற்றர் தூரத்திலுள்ள வீதிகள் சீரமைப்பிற்காக பொருட்களும் கனரக வாகனங்களும் எடுத்துச் செல்லப்படுவதால் ஏற்கனவே காப்பெற் இடப்பட்ட குறித்த களஞ்சியத்தினை அண்மித்த ஆலயப்பகுதி வீதிகள் சேதமடைய ஆரம்பித்துள்ளன.

அத்தோடு பண்டத்தரிப்பு வடலியடைப்பிலிருந்து சங்கானை வைத்தியசாலை செல்லும் வீதி முற்றாக சேமடைந்துள்ளது. இதனால் மக்கள் இதனை பயன்படுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒடுங்கிய வீதிகளை கொண்ட கிராமப்புறங்களின் மையப்பகுதிகளில் களஞ்சியசாலைகளை அமைத்து அங்கிருந்து தொலை தூரங்களிற்கு கனரக வாகனங்கள் மூலம் பொருட்களை கொண்டுசெல்வது முற்றிலும் பொருத்தமற்ற செயல் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அங்கு களஞ்சியப்படுத்தவும் அங்குகிருந்து வெளியடங்களுக்கு எடுத்துச் செல்லவும் என இரட்டிப்பு முறையில் ஒடுங்கிய வீதிகளினூடாக நாளொன்றிற்கு நூற்றுக்கணக்கில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் வீதிகள் நாசமாவதுடன் விபத்துக்கள் ஏற்படலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.

எனவே இப்பகுதிகளிலிருந்து இவற்றை அகற்றி தற்போது வேலைகள் நடைபெறும் இடத்திற்கு அண்மையாக அல்லது பிரதான வீதிகளுக்கு அண்மையாக மாற்றும்படி வீதி அபிவிருத்தி அதிகார சபையினரையும் சம்மந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினையும் மக்கள் கேட்டு நிற்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button