சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் 3,300 குடும்பங்கள் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் விசேட ஊடக சந்திப்பு இன்று மதியம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக 243 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
இன்று அதிகாலை வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தினுடைய அறிக்கையின்படி இன்றும்கூட வட மாகாணத்தில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மிகக்குறுகிய காலத்திலேயே மழைவீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கின்றது.
அனேகமான வீதிகள், வீடுகள், பொது இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக தற்போதைய நிலையில் சேத விபரங்களை மதிப்பீடு செய்து வருகின்றோம்.
அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைத்துச் செயல்பட்டு வருகின்றார்கள். வெள்ள நிலைமை காரணமாக நாங்கள் இன்று காலையில் பாடசாலைகளை ஆளுநரின் அனுமதியுடன் மூடுவதற்குத் தீர்மானித்திருந்தோம்.
வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.