இலங்கைசெய்திகள்

அரசியல் நோக்கத்துக்காக கையெழுத்துப் போராட்டம் முன்னாள் எம்.பி. சுரேஷ் சந்தேகம்

ஏற்கனவே ஐ.நா. சபையில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நீக்கம் தொடர்பான தீர்மானங்களை அரசியல் நோக்கத்துக்காகக் கையெழுத்துப் போராட்டமாக ஆரம்பித்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அதனை நீக்குமாறு ஏற்கனவே ஐ.நாவிடம் நாம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.

தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இது அரசியல் நோக்கத்துக்காகச் செய்யப்படுகின்றதா என்ற கேள்வி பலருக்கு எழுகின்றது.

ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நல்லாட்சி அரசில் சபாநாயகராக இருந்த கரு ஜயசூரிய மற்றும் முஸ்லிம் தரப்புகளும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப்  போராட்டத்தில் பங்குபற்றி கையெழுத்திட்டிருந்தனர்.

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது. அப்போது அவருக்கு இது பாரதூரமான சட்டமாகத் தெரியவில்லையா?

நல்லாட்சி அரசில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் பலர் கைதுசெய்யப்பட்டார்கள். அப்போது சபாநாயகராக இருந்த கரு ஜயசூரியவுக்குப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாரதூரமான சட்டமாகத் தெரியவில்லையா?

கடந்த காலங்களில் முஸ்லிம் தரப்பினர், தமிழ் மக்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடும்போது அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கு ஏன் முன்வரவில்லை?

இப்போது இவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கூறுவது ஆட்சி அதிகாரம் தங்களிடம் இல்லை; தங்களின் சுதந்திரம் பறிபோய் விடும் என்பதற்காகவே கையெழுத்துப் போராட்டத்தை நடத்துகின்றனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே நாம் போராடி வருகின்ற நிலையில் சில தரப்பினர் தமது அரசியல் தேவைகளுக்காகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரி கையெழுத்துப் போராட்டத்தை நடத்துவது வேடிக்கையாக உள்ளது.

முஸ்லில்கள் தற்போதைய அரசில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைதுசெய்யப்பட நிலையில் இப்போதுதான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என அவர்களும் உணர்கின்றார்கள்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் போரில் ஈடுபட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படாத நிலையில் சாதாரண மக்களே குறித்த சட்டத்தால் பல காலமாக சிறைகளில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button