“பறிக்காதே பறிக்காதே காணிகளைப் பறிக்காதே” என நாடாளுமன்றத்துக்குள் கோஷம் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் எம்.பிக்கள் சபைக்குள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வன ஜீவராசிகள் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போதே தமிழ் எம்.பி.க்கள் சபைக்குள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் உரையாற்றிய பின்னரே பதாகைகளுடன் எழுந்த தமிழ் எம்.பி.க்கள், ”பறிக்காதே பறிக்காதே காணிகளைப் பறிக்காதே”, “தமிழர் நிலங்களைப் பறிக்காதே” என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாடாளுமன்ற உறுப்பினர்களன சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரசன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் விசனமடைந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரான சி.பி. ரத்நாயக்கவும், இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவும் இந்த ஆர்ப்பாட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு சபைக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்த நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன் இராமநாதனிடம் வலியுறுத்தினர்.
அவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்களைக் கட்டுப்படுத்த முயன்றபோதும் அவர்கள் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.
ஜெனிவா அமர்வுக்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுக்கின்றனர் எனவும், தமிழ் மக்கள் மீதி இவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது எனவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்ற சம்பிரதாயம் தெரியாதுவிட்டால் சுமந்திரன் எம்.பியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறும் அவர் கூறினார்.
இதன்பின்னர் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சி.பி. ரத்நாயக்க மக்களுக்குச் சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படாது என வழங்கிய உறுதிமொழியையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர்.