மதுபோதையில் காரைச்செலுத்தியவர் மோட்டார்சைக்கிளை மோதித்தள்ளினார்
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் சற்றுமுன்னர் (06) பலாலி பிரதான வீதியில் ஊரெழு அம்மன்கோவில் சந்தி அருகில் இடம்பெற்றுள்ளது.
ஊரெழு கரந்தன் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தபெண் சுன்னாகத்திற்குச் செல்லும் வீதியைக் கடப்பதற்காக மோட்டார் சைக்கிள் சமிக்கையை ஒளிரவிட்டுவிட்டு வீதியில் நின்றுள்ளார்.
இந்நிலையில், புன்னாலைக்கட்டுவன் திசையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் வீதியைக் கடப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நின்ற பெண்ணை மோதித்தள்ளியது.
அதிவேகத்தில் வந்த கார் மோதித்தள்ளியதில் குறித்த பெண் 50 மீ்ற்றருக்கு அதிகமாக மோட்டார்சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் வீதியில் திரண்ட மக்கள் குறித்த பெண்ணை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காரைச் செலுத்தி வந்த சாரதி மதுபோதையில் இருந்தமையே விபத்துக்கான காரணம் என அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கார்ச் சாரதியை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.