“அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம். ராஜபக்சக்களின் யுகம் உடனடியாக நிறைவுக்கு வர வேண்டும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் எரிசக்திப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான நேற்றைய (10) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை மின்சார சபை ஆரம்பத்தில் நட்டமடையும் நிறுவனமாக இருந்ததில்லை. அதுபோல் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் நட்டமடையும் நிறுவனமாக இருக்கவில்லை. எனினும், தற்போது மின்சார சபையை வங்குரோத்து நிலைக்கு அரசு தள்ளியுள்ளது.
விவசாய அறுவடைக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய நீர் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களில் தற்போது நடந்து செல்ல முடியும். அரசின் தவறான தீர்மானங்களே நாட்டின் தற்போதைய நிலைக்குக் காரணம். எனவே, ராஜபக்சக்களின் யுகம் உடனடியாக நிறைவுக்கு வர வேண்டும்” – என்றார்.