மயானங்கள் புனிதமானது அவற்றை புனிதசின்னங்களாக பராமரித்த வரலாறும் தமிழர்களுக்கு உண்டு.
எமது இணைய தளத்தின் சமூகப்பார்வையில் இன்று (14) மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மயானம் ஒன்றை அகற்றுவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை அடிப்படையாக கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி.கிழக்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட ஊரெழு பொக்கணை மயானத்தைக் அகற்றக்கோரிய கிராம மக்களின் கோரிக்கையினை முன்னெடுத்துச் சென்ற அப்பகுதி வட்டார உறுப்பினரும், ஊரெழு மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத் தலைவருமான சிவலிங்கம் நிமல் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றைய தினம் அப்பகுதிக்கு வலி.கிழக்கு பிரதேசசபை தவிசாளர் ஜெ.நிரோஷ் அவர்கள் களவிஜயம் மேற்கொண்டு நேரடி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே பிரச்சினைகள் முன்னெடுக்கப்பட்போதும் தற்போது இதனைப் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால் மக்களின் வேண்டுகோள் அவசரமாக்கப்பட்டுள்ளது.
உண்மையில் மக்கள் குடியிருப்புகளை அண்டிய இடத்தில் மயானம் அமைக்கப்பட்டுள்ள தென்பதையும் இவ்விடயம் குறித்து ஆராயும் போது, அது மக்களின் அன்றாட காரியங்களில் தாக்கம் செலுத்துவது தெரியவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மயானத்தின் புகை சிறுவர்களுக்கு நோய்த்தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் நாளாந்த வருமானம் பெறும் அக்குடும்பங்களின் வாழ்வியலில் இவை போன்ற பிரச்சினைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்த மயானம் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன் இதனைச்சுற்றி பல சனசமூக நிலையங்கள் உள்ள நிலையில் பெரும்பான்மையான சனசமூக நிலையங்களும் இவர்களின் கோரிக்கைக்கு உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
இவ் மயானத்தைச் சுற்றி பல குடியிருப்புக்கள் காணப்படுவதோடு, ஆலயமும் அமைந்துள்ளது. எனவே இவ் மயானத்தை உடன் அகற்றக்கோரி அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழர்களின் பராம்பரியங்களின் மயானங்கள் புனிதமானது என்பதோடு, அவற்றை புனித சின்னங்களாக பராமரித்த வரலாறும் தமிழர்களுக்கு உண்டு. ஆயினும் மக்கள் குடியிருப்புக்களில் இவ் மயானம் காணப்படுவதாலேயே மயானத்தை மக்கள் அகற்றக்கோருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் மயானங்கள் தொடர்பாக மக்களுக்கு அதிருப்தி இருப்பது தொடர்பாக மக்களின் சுகாதார நிலைமை தொடர்பாக கவனமெடுக்கவேண்டியது அவசியம் எனினும், பிரதேச சபையில் இருதரப்பினையும் ஒன்றிணைத்து பேச்சுக்களை முன்னெடுப்பதன் மூலமே சரியான முடிவினை எடுக்கமுடியும் எனவும் கௌரவ தவிசாளர் அவர்களினால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.