வீதியில் அடாத்தாக வேலி அடைத்த குடும்பம்
பல வருடங்களாக மக்கள் பயன்படுத்தும் வீதியை தமது காணி என உரிமை கோரி அடாத்தாக வேலி அமைத்து மக்களை முட்டாள் ஆக்கும் விசித்திரமான சம்பவம் ஒன்று தென்மராட்சியில் பதிவாகியுள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் தெற்கு வாகையடி கிழக்கு ஊரெல்லை இணைப்பு வீதி பகுதியிலேயே இவ் அடாத்தான சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் என பல மக்கள் பயன்படுத்தும் குறித்த வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாது காணப்படுகின்றமையால் மழை காலங்களில் வெள்ளம் நிரம்பி வழிந்தோடுவதால் மக்கள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த பகுதியின் பிரதேசசபை உறுப்பினர் அ.மதன்ராஜ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு குடும்பத்தின் முட்டாள்தனமான செயற்பாட்டால் வீதி புனரமைப்பு நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த குடும்பத்தினரால் முன்பக்க மதில் கட்டப்பட்டுள்ள நிலையில், முன்னர் தமது காணி இருந்த இடத்தில் இருந்து மதில் கட்டுவதற்கு விடப்பட்ட காணியையே தமது காணி என உரிமை கோரி முட்டாள்தனமான செயற்பாட்டை அரங்கேற்றியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
இச்சம்பவம் தொடர்பில் குறித்த பகுதி கிராம சேவகருக்கு (J/310) தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்க்கொள்ளவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒரு குடும்பத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினால் ஒரு கிராமத்தின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், வீதி புனரமைப்பு பணிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
எனவே, குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு குறித்த வீதியை மீட்டு விரைவாக புனரமைத்து மக்கள் சிரமமின்றி போக்குவரத்தை மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.