ஆசிரியர்களை மதிக்கத்தெரியாத சமூகத்தில் ஏன் பணியாற்ற வேண்டும்? அத்துடன் ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பை மேற்க்கொள்ள வேண்டிவருமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
கிளிநொச்சியில் நேற்று பெற்றோல் நிரப்புவதற்கு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்ற ஆசிரியை ஒருவர் அங்கு நின்றவர்களால் அவமானப்படுத்தப்பட்டு கண்ணீருடன் வெளியேற்றப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள கண்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் தற்போது காணப்படுகின்ற பிரச்சனை அனைவருக்கும் பொதுவானது. ஆனால் ஆசிரியர்களின் பணியும், சேவையும் வித்தியசாமானது. எரிபொருள் வரிசையில் ஆசிரியர்களை காக்க வைப்பதும், அவமானப்படுத்தப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒவ்வொரு ஆசிரியர்களும் சமூகத்திற்கு ஒளியூட்டும் விளக்குகள். கையெடுத்து வணங்க வேண்டிய ஆசிரியர்களை கை நீட்டி வெருட்டாதீர்கள்.
எனவே அரசாங்கம் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் ஆசிரியர்கள் எரிபொருள் வரிசையில் நிற்காது அவர்களின் சேவைகளைத் தொடர உடனடியாக தீர்வு வழங்கவேண்டும்.
இல்லையேல் இது பாரதுரமான பிரச்சனையை உருவாக்கும். இப்படியான பிரச்சனைகள் தொடருமானால் ஆசிரிய சேவையில் இருந்து ஒதுங்க வேண்டி வரும். கிளிநொச்சியில் ஆசிரியை விட்ட கண்ணீர் அனைத்து ஆசிரியர்களின் கண்ணீருக்கும் சமமானது என்றுள்ளது.