இலங்கைசமீபத்திய செய்திகள்

கல்வி மீது அக்கறை இல்லாத கிளிநொச்சி நிரவாக சேவை அதிகாரிகள் !ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை புறக்கணிப்பு!

அரசாங்க அதிபரை விடவும் மோசமாக நடந்துகொள்ளும் அரச அதிபரால் எரிபொருள் விநியோக பொறுப்புக்களை கையாளவென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி…

நாளை பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் எரிபொருள் இன்றி அல்லாடும் ஆசிரியர்கள்…

நாளைய தினம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு செல்வதில் எரிபொருள் பிரச்சனைகாரணமாக பாரிய அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு எரிபொருள் விநியோகம் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கிடைக்காமல் இருந்து கடந்த 20 ஆம் திகதியே மீளக்கிடைக்க தொடங்கியது. தேசிய ரீதியிலான கொள்கை அடிப்படையில் முதல் நாள் வாகனத்தின் இறுதி இலங்கங்களின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டது. எனினும் அதனை இடைநிறுத்திய அரச அதிபர் தம்மால் வழங்கப்படும் எரிபொருள் விநியோக அட்டைக்கே எரிபொருள் வழங்கப்படவேண்டும் என உத்தரவிட்டதன் மூலம் பல நூறு மக்கள் தெருவில் காத்திருந்து எரிபொருள் இருந்தும் அதனை பெற்றுக்கொள்ள முடியாமல் வீடு சென்றனர்.

நேற்று மீளவும் எரிபொருள் அட்டைகள் கட்டாயம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டு தேசிய ரீதியிலான இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டது.

திங்கள் தொடக்கம் பாடசாலை கடமைகளில் ஆசிரியர்கள் ஈடுபடவேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமக்கான எரிபொருள் அட்டைகளுடன் அல்லது எரிபொருள் அட்டைக்கு விண்ணப்பித்தும் அது கையில் கிடைக்காத நிலையில் அட்டை இன்றியும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆசிரியர்கள் அணுகிய போதிலும் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் தான் எரிபொருள் வழங்க முடியும் கல்வி அத்தியாவசிய சேவைக்குள் அடங்கவில்லை ஆகவே எவ்வித முன்னுரிமைகளும் வழங்கப்பட முடியாதென திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்…

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அரச திணைக்களத்தில் இருந்து பதிவு கடமைக்கு வருபவர்கள், அரசாங்க அதிபரின் அல்லக்கைகள் எல்லாம் அத்தியாவசிய சேவைக்குள் அடங்காத போதிலும் இறுதி இலக்க நடைமுறைக்குள் அடங்காத போதிலும் தங்களின் வாகனங்களுக்கு மோட்டார் சைக்கிள்களுக்கு அதே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போதிய அளவு எரிபொருள் நிரப்பிச்செல்கின்றனர்.

பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையை காரணமாக காட்டி ஆசிரியர்களுக்கு இதுவரை எரிபொருள் வழங்கப்பட்டிருக்கவில்லை. நேற்றைய இலக்கத்திற்கு உரியவர்களுக்கு நேற்றும் இன்றைய இலக்கத்திற்கு உரியவர்களுக்கு இன்றும் எரிபொருள் குறிப்பிட்ட நிலையங்களில் வழங்கப்பட்டபோதிலும் நாளைய இலக்கத்திற்குறிய ஆசிரியர்கள் தமது கடமைகளுக்கு நாளை செல்லவேண்டியதை சுட்டிக்காட்டியும் அவர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை.

மாவட்ட அரசாங்க அதிபரும் அவரோடு இயங்குபவர்களும் கல்வி இந்த மாவட்டத்திற்கு அத்தியாவசியம் இல்லையென கருதுகின்றனரா? அதனால்தான் கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் இலங்கையில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது? எதற்கு எப்போது முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்பதைக்கூட அறியாதவர்களை அல்லது தான் தோன்றித்தனமாக செயற்படுபவர்களை மாவட்டத்தின் தலைமையாக கொண்டதால் எமது மாவட்டம் மேலும் மேலும் கீழ்நோக்கி போகிறது.

இன்றும் நேற்றும் தமக்குறிய இலக்கம் இல்லாத ஆசிரியர்கள் நாளை கடமைக்கு எவ்வாறு போவது? நாளை அவர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ளாவிட்டால் அடுத்து எரிபொருள் பெற்றுக்கொள்ள மூன்றுநாட்கள் காத்திருக்கவேண்டும் இந்நிலையில் அவர்கள் பாடசாலைகளுக்கு கடமைக்கு செல்வார்களா அல்லது பெற்றோல் வரிசையில் நிற்பார்களா? எதை முதன்மைப்படுத்துவார்கள்?

ஒரு நாட்டின் அடித்தளமான கல்வி விடயத்தில் கூட அக்கறை இன்றி செயற்படும் இவர்கள் இந்த மாவட்டத்தின் அல்ல முழு நாட்டினதும் சாபக்கேடுகள். நாளை பாடசாலைகள் தொடங்கப்படவேண்டிய நிலையில் இன்று ஆசிரியர்களுக்கல்லவா முதன்மை அடிப்படையில் எரிபொருள் வழங்கியிருக்கவேண்டும்? இதைப்பற்றி சிந்திக்கும் திறன் அற்றவர்கள் அரச நிர்வாக சேவை கற்றலில் எவ்வாறு தேர்ச்சியடைந்தார்கள்? எவ்வாறு பதவிக்கு வந்தார்கள்?

நாளைய நாட்டின் தூண்களுக்காக அவர்களின் கல்விக்காக உங்களிடம் எரிபொருளுக்கு ஆசிரியர்கள் கையேந்தவேண்டும் என்பதும் அப்படி கையேந்தினால்கூட அதை வழங்கமாட்டோம் என ரூல்ஸ் பேசுவதும் மனிதச்செயலுக்குள் அடங்காது…. முதலில் மனிதராக மாறுங்கள்…..

நன்றி சுப்பிரமணிய பிரபா

Related Articles

Leave a Reply

Back to top button