இந்தியாஇலங்கைசெய்திகள்

இராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!

தமிழக மீனவர்களைக் கைதுசெய்யும் இலங்கை அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசு ஏலமிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத இந்திய மத்திய அரசைக் கண்டித்தும் இன்று இராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இதன்போது 15 நாட்களில் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தங்களது அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களையும் அவர்களது மூன்று விசைப்படகுகளுடன் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்தனர். கைதான மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைதுசெய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாகப் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும், தொடர்ந்து இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும், கைதுசெய்வதையும் நிறுத்த வேண்டும் எனக் கோரியும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பை மீறி பல கோடி மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை வசம் இருந்த மீன்பிடி விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காததைக் கண்டித்தும் இன்று ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சென்னை ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இதற்கமைய இன்று மாலை 4 மணியளவில் இராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் 300 இற்கும் மேற்பட்டோர் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலுள்ள மீன்பிடி அனுமதி சீட்டு அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு இராமேஸ்வரம் ரயில் நிலையம் நோக்கி ரயிலை மறித்து போராட்டம் நடத்த வந்தனர்.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் ரயில் நிலையம் முன்பு தடுப்புகள் வைத்து மீனவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சு நடத்தி ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், போராட்டத்தைக் கைவிட மறுத்த மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எதிர்வரும் 15 நாட்களுக்குள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை அரசால் ஏலமிடப்பட்ட படகுகளை தமிழக மீனவர்களிடம் மீண்டும் திருப்பித் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்துப் படகுகளின் உரிமம் மற்றும் மீனவர்கள் இந்தியப் பிரஜை இல்லை எனக் குறிப்பிடும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை இராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப் போவதாகக் கூறி மீனவர்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இவ்விடயம் குறித்து இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button