வைத்தியரைச் சுட்டுப் படுகொலை செய்த குற்றவாளியான நபருக்கு இன்றைய தினம் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி வவுனியா , கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
வவுனியாவைச் சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருந்தமை உறுதியான நிலையில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன் படி, நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற தண்டனை வழங்கப்பட்ட நபர், சம்பவ காலத்தில் தமிழ்மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவர் எனவும் கூறப்படுகிறது.
பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இவர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.