மும்முறை “குரு பிரதீபா பிரபா” விருது பெற்ற மழலைகளின் சிகரம் அமரர் வே . அன்பழகன்!!
V. Anbazhagan
வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் மனித வாழ்க்கை என்பது பல விதமாக அமைகின்றது. அதனைச் செம்மையாக்குவதும் வீணாக்குவதும் எமது கரங்களிலேயே உள்ளது. அந்த வகையில் தன் வாழ்க்கையைச் சீரும் சிறப்பும் கொண்டதாக மாற்றியமைத்து பல சின்னச் சிட்டுகளை, வண்ண மொழி கூற வைத்த சிறந்த ஆசான் புலமைச்சிகரம் வே. அன்பழகன்….
இவர், இலங்கையின் மூளை என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணத்தில் அறிவு, கலை, இலக்கியம் என அனைத்திலும் சிறந்த அழகிய ஊராம் மட்டுவில் மண்ணில் வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதியரின் மகனாகப் பிறப்பெடுத்தார். ஒன்பது பிள்ளைகளில் தானும் ஒரு மகவாக உதித்து பெற்றவர் காட்டிய சீர்மிகு பாதையில் விருப்புடன் தானேகி கல்வியில் உயர்ந்தோங்கினார்.
கல்வியோடு ஒழுக்கத்தைக் கண்ணெனக் கடைப்பிடித்து, உற்றாரும் உறவும் சுற்றமும் போற்ற வாழ்ந்து வந்தவர். வீட்டின் கடைக்குட்டியாய் உதித்து அன்பிலும் பாசத்திலும் திழைத்தவர் ஆரம்பக்கல்வியை மட்டுவில் தெற்கு அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கற்றார். தொடர்ந்து, உயர்தரம் வரை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்றார். தான் பெற்ற அன்பையும் பாசத்தையும் பாடசாலையில் மாணவனாக இருக்கும் போதே அனைவருக்கும் அள்ளிக்கொடுத்த அற்புதமானவர். நல்ல நண்பர்களைப் பெற்று, அவர்களுடன் இணைந்து பல்வேறு சமூகப்பணிகளையும் முன்னெடுத்தவர்.
தேடலும் ஆற்றலும் கொண்ட மாணவனாய்த் திகழ்ந்து சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்ற இவர், மாணவர்களுடன் ஆடிப்பாடி தானும் ஒரு சிறுவனாய் மாறிப்போவதில் பெரு நிறைவு கொண்டார். அழகியலில் அதிக ஆர்வம் கொண்ட இவர் , இதன் காரணமாக, ஆரம்பக்கல்வியைத் தனது களமாகத் தெரிவு செய்து தனது சொந்த ஊரான மட்டுவில் மெரிக்கன் மிஷன் பாடசாலையிலேயே ஆசிரியர் சேவையை ஆரம்பித்தார்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரிய மாணவனாக இணைந்து, தனது அறிவு, ஆற்றல், தலைமையேற்கும் பண்பு, அன்பு காட்டும் குணம் இவற்றால் பலரது நன்மதிப்பையும் சிறந்த ஆரம்பக்கல்வி ஆசிரியர் என்ற பெயரையும் பெற்றார். அதன் பின்னர் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் இணைந்து தனது கற்பித்தல் பணியைச் செவ்வனே செய்தார். “புயல் வேகத்தில் இனித்திடும் ஆசான்” என்ற அடைமொழி இவருக்கானது ஆயிற்று. இவரிடம் கற்கவேண்டும் என்பதற்காகவே பெற்றோர் தமது பிள்ளைகளை இப்பாடசாலையில் இணைத்த வரலாறு ஆசிரியர் அன்பழகனுக்கானது.
‘அன்பொளி’ என்ற கல்வி நிறுவனத்தை ஆரம்பித்து கல்விப்பணியை மிகச்சிறப்புடன் ஆற்றிவந்தவர். தன் மனைவியுடன் இணைந்து ஏனைய ஆசிரியர்களையும் இணைத்து அன்பொளியை மிக அற்புதமான கல்விக்கூடமாக உருவாக்கிய இயக்கியவர். மிகச்சிறந்த வளவாளரான இவர், அனைவரையும் இவ்விதமே வளர்த்தெடுத்தார்.
கொக்குவில் ஆரம்ப பாடசாலை, செட்டித்தெரு மெதடிஸ்தமிசன் பாடசாலை என இவரது பணி விரிவடைந்தது. எந்தப்பாடசாலையில் இணைந்தாலும் அங்கு ஆரம்பக்கல்வியில் சாதனை மாணவர்களை உருவாக்குவது இவரது தனிச்சிறப்பு. புலம்பெயர் உறவினர்களின் வேண்டுகோளின் பெயரில் கல்விச்சுற்றுலாக்களை குடும்பத்துடன் மேற்கொண்ட இவர் அங்கெல்லாம் வாங்கிக் குவித்தவை புத்தகங்கள்தான்.
குடும்பத்தினையும் கவனித்து, சமூகசேவைக்காரியங்களிலும் விருப்புடன் ஈடுபட்டு, கல்விப்பணியையும் செவ்வனே செய்தவர். “குரு பிரபா பிரதீபா” என்ற விருதினை மும்முறை பெற்ற பெருமைக்குரியவர் இவர். அறிவியல், சிறுவர் சார்ந்த நூல்களை மொழிபெயர்த்து அனைவரும் பயன்பெறச்செய்தவர்.
மூன்று மகன்களின் தந்தையான இவர் முப்பெருந் தேவிகளும் ஒன்றிணைந்து வாசம் செய்த அற்புத மனிதர். அழகு, அறிவு, அன்பு என அனைத்தும் சேர்ந்த ஒப்பற்ற ஆசிரியர் அன்பழகனை கொடிய நோய் காவு கொண்டு விண்ணுலகம் கொண்டு சென்றது…
எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என வாழ்ந்து காட்டிய மிக உன்னதமான மனிதர் புலமைச்சிகரம் வே. அன்பழகன் அவர்கள்…..