ஆண்களின் ஆதிக்க மனநிலையின் பிடியில் சிக்கிக் கொள்ளும் சரஸ்வதி, தேவகி, ரஞ்சனி ஆகிய பெண்களின் கதையாக ‘ஆந்தலாஜி’ பாணியில் உருவாகியுள்ளது சோனி லைவ் ஓடிடி தளத்தில வெளியான ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்.
அடுத்த நாள் உணவிற்கு வழியில்லை என்கிற நிலையில் 3 நாட்களாக காணாமல் போன கணவனைத் தேடும் சரஸ்வதி , ‘ஜீன்ஸ் அணிந்த பெண்கள் அழகாக இருந்தார்கள். பெண்களுக்கு கான்பிடன்ஸ் ரொம்ப முக்கியம் ’என தன் டைரியில் எழுதி வைத்ததை குடும்பத்தினர் முன் படித்துக்காட்டும் கணவனிடம் அதைத் தடுக்க முயற்சி செய்யும் தேவகி, கனவை அடைய முடியாத ஓட்டப்பந்தைய வீராங்கணை ரஞ்சனி.
இந்த 3 பேரின் கதையின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையைப் பேசியிருக்கிறது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்.
ஏன் சரஸ்வதியின் கணவன் காணாமல் போனான்? ஏன் தேவகியின் டைரியை குடும்பத்தினர் படிக்க வேண்டும்? ரஞ்சனியால் ஏன் தன் கனவைத் துரத்த முடியவில்லை? இந்த அனைத்து ‘ஏன்’களுக்கும் தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வசந்த் எஸ். சாய்.
சரஸ்வதி , தேவகி , ரஞ்சனி ஆகிய மூவரும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பெண்கள் . சரஸ்வதியைத் தவிர்த்து மற்ற இருவரும் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனாலும் அந்தந்த வீட்டு ஆண்களின் குணங்கள் , எண்ணங்கள் எப்படி ஒரு பெண்ணின் கனவுகளை , அவளுடைய சுதந்திரத்தை பறிக்கிறது என்பதை எழுத்தாளர்கள் அசோகமித்திரன்(விமோசனம்) , ஜெயமோகன்(தேவகி சித்தியின் டைரி) , ஆதவன் எழுதிய சிறுகதை உள்பட மூன்று சிறுகதைகளைத் தழுவி சில மாறுதல்களுடன் முடிந்தவரை மூலப்படைப்புகளின் மையத்தை சிதைக்காமல் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பெண்களின் துயரத்தை மட்டுமே பேசி அலுத்துப் போன கதைக்களங்களில் முற்றிலும் மாறுபட்டு எதார்த்தம் இதுதான் என்கிற உண்மையை எந்த ஒரு அதிரடி காட்சிகளும் இல்லாமல் நம் வீட்டுப் பெண்களை நினைவு படுத்தியதே இப்படத்தின் வெற்றி.
முக்கியமாக சரஸ்வதியின் இறுதிக்காட்சியும் ரஞ்சனி தன் மகளின் பள்ளிப் பேருந்தைத் துரத்தி வருகிற காட்சியும் பெரிய மௌனத்தை ஏற்படுத்துபவை.
தேவைப்பட்ட இடங்களில் இளையராஜாவின் இசை , மனதிற்கு நெருக்கமான ஒளிப்பதிவு , வசனங்களின் அடர்த்தி போன்றவை படத்தின் பலம் . குறிப்பாக காளிஸ்வரி ஸ்ரீனிவாசன் (சரஸ்வதி) , கருணாகரன் , தேவகி கதையில் வருகிற சிறுவன், லஷ்மி பிரியா (ரஞ்சனி) ஆகியோர் மிகை இல்லாத தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
நன்றி – தினமணி