முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரின் பணிக்கு கடற்படையினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்திற்கு வடமாகாண ஊடக அமையம் தனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றது. அத்துடன் வடமாகாணத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேலும் தெரிவிக்கப்பட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்புத் தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதும் அவர்களது பணிகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. இச் செயற்பாடுகள் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது அறிக்கையிடலை மேற்கொள்வதற்கு தடையாகவும் அமைகின்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணி சவீகரிப்பு அளவீடுகள் கடற் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் குமணன் மீது கடற்படை மற்றும் பொலிசார் அவரது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட காணொலி சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை ஏனைய ஊடகவியலாளர்களின் பணிகளுக்கும் பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. அவர் தன்னை ஊடகவியலாளர் என்று ஊறுதிப்படுத்திய பின்னரும் பொலிசார் அவரை அழைத்துச் செல்ல முற்படுவதையையும் கடற்படை ஒருவர் அவரை அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளுக்கும் வடமாகாண ஊடக அமையம் தனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றது. இவ்வாறு சமூகத்திலுள்ள பல்வேறு அடக்குமுறைகளையும் அநீதிகளையும் தட்டிக்கேட்கும்போது ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தும் நடவடிக்கை அவர்களது சுதந்திர செயற்பாட்டிற்கு தடை ஏற்படுத்துகின்றது. எனவே இவ்வாறு இடம்பெறும் சம்பவங்களுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு தனது முழுமையான விசாரணைகளை ஆரம்பித்து சமூகத்தின் செயற்பாடுகளையும் வெளிக்கொண்டு வருவதற்கும் உரிய சுதந்திரமான செயற்பாடுவதற்கும் வழியேற்படுத்த முன்வருமாறும் ஊடகவியலாளர்கள் அறிக்கையிடல்களை மேற்கொள்ளும்போது விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மேலும் தெரிவிகாகப்பட்டுள்ளது.
Leave a Reply