எஸ்.ரி.எப். சுற்றிவளைப்பு; 11 பேர் வசமாக மாட்டினர்!
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக 7 மதுபான சுற்றிவளைப்புகளில் எழுவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 100.5 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 5 லீற்றர் கோடா, இரண்டு செப்புத் தகடுகள், 1 மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கேகாலை, திம்புல்கமுவ பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி லொறியொன்றில் ஒரு தொகை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, பூகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரிமுல்ல பிரதேசத்தில், அனுமதிப்பத்திரமின்றி களனி கங்கையில் மணல் அகழ்ந்து அதனை லொறியில் ஏற்றிக்கொண்டிருந்த இருவரைப் பூகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பூகொட பிரதேசத்தை சேர்ந்த 39, 44 வயதுகளையுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது டிப்பர் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கத்தியைக் காட்டி வழிபறிப் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் வெயாங்கொட மாளிகாதென்ன பிரதேசத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 3 தொலைபேசிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. வெயாங்கொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.