குழந்தையாகப் பிறக்கும்போது மனப்பாங்கில் இல்லாத வேற்றுமை பின்னாட்களில் ஊட்டி வளர்க்கப்படுகிறது இதுவே வன்முறைகளுக்கு வித்திடுகிறது என தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதக் குழு இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.
“பன்மைத்துவத்திற்கான ஆக்கபூர்வ இளையோர் பங்கேற்பு” எனும் கருப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் அவர் மாணவர்கள் ஆசிரியர்கள் பல் சமயத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நிகழ்வு காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஜெஸீமா முஸம்மில் தலைமையில் செவ்வாய்க்கிழமை 30.11.2021 இடம்பெற்றது. இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மனோகரன்.
நாங்கள் பிறக்கும்போது எந்த இனமோ மதமோ மொழியோ கலாசாரமோ என்றில்லாமல் வெறும் குழந்தைகளாவே மட்டும்தான் பிற்கின்றோம்.
ஆனால் பின்னாட்களில் நாம் வளரும் சூழல்தான் நம்மை இன மத மொழி கலாசார அடையாளங்களுடன் மாற்றி விடுகிறது.நமது குருதியை பரிசோதித்தால் உலகிலுள்ள அனைவருக்கும் ஒன்றுதான், சிவப்புத்தான்.
ஆகவே பிறக்கும்போது இல்லாமல் இடைக்காலத்தில் புகுத்தப்பட்ட வேற்றுமைகளை மறந்து நாம் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் சமாதான ஆர்வலர்களால் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முக்கியமாக நமக்குள்ள உரிமைகள் மற்றவர்களுக்கும் இருக்கின்றதென்பதை இளையோராகிய மாணவப்பருவத்திலுள்ள நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”என்றார்.
நிகழ்வில் மாணவர்களுக்கு அனைத்துப் பல்கலைக்கழக அனைத்து சமூக மாணவர்களாலும் எழுதப்பட்ட ஐக்கிய சமூகத்திற்கான அறைகூவல் எனும் ஆக்க இலக்கிய நூல் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் உம்முல் மாஹிரா பகுதித் தலைமை ஆசிரியை சித்தி நௌபீறா உட்பட மாவட்ட சர்வமதக் குழு அங்கத்தவர்களும் இணைந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
தேசிய சமாதானப் பேரவை மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதம் இறுதி வாரத்தில் அதன் “பன்மைத்துவத்திற்கான ஆக்கபூர்வ இளையோர் பங்கேற்பு” எனும் கருப்பொருளுக்கமைவாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் சிங்கள சமூக மாணவர்கள் 60 பேருக்கு தலா மூவாயிரம் ரூபாய் பெறுமதியான கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர் – வ.சக்திவேல்