உலகம்செய்திகள்

ரஷியாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் தோல்வி – வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடிப்பு!!

UN Resolution

உக்ரைன் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷியா முறியடித்தது.

உக்ரைன் மீது ரஷியப் படைகள் உக்கிரமான தாக்குதலை மூன்றாவது நாளாக நடத்தி வருகின்றது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனைத் தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷியப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக் கொள்ள, ரஷியப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரையும் நெருங்கியுள்ள ரஷியப் படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ரஷியா தனக்குள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button