தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிருக்குப் பயந்து, சமீபத்தில் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இவர், பல கொலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள், பல கொலைகள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முக்கிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பிலும் வெளிநாட்டிலும் உள்ள சில முக்கிய இராஜதந்திர தூதரகங்களுக்கு தம்மிடம் உள்ள தகவல்களின் சுருக்கமான விபரங்களைக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அவர், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து விடுதலைப்புலிகள் கட்சியும் ஏனையவர்களும் செய்த குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. அதிகாரிகள் சுமார் 5 நாட்கள் அவரிடம் இருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை அந்த நபர் வெளிப்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் கட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்த கொலைகள் பற்றிய விவரங்களையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார் எனக் கூறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக அறிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் ஐ.நா.விடம் இருந்து இந்த விடயம் குறித்து அறிய முயற்சித்தப்போதிலும் பயனளிக்கவில்லையென அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
அந்த ஆங்கில ஊடகமானது, ஐ.நா. மற்றும் இராஜதந்திர வட்டாரங்களிற்கு வழங்கப்பட்ட தகவல்கள் முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சிலர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை சுமத்தும் வகையில் அமைந்துள்ளன என்றும் இந்த தகவல்களை அடிப்படையாகக்கொண்டு, ஐ.நா.வும் தூதரங்களும் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றன என்பது தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.