பல துறைகளில் ஆற்றல் கொண்ட இலங்கையின் பிரபல தமிழ் ஆங்கில எழுத்தாளரும் கலை இலக்கிய விமர்சகரும் ஊடகரும் வானொலி தொலைக்காட்சி ஒலிபரப்பாளருமான திரு. கைலாயர் செல்லநைனார் சிவகுமாரன் அவர்களுக்கு 3. 12. 2021 இலங்கை அரசாங்கத்தின் கௌரவ விருதான “சாகித்திய ரத்னா” விருது இலங்கை கலாசாரத்துறையால் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட இவர் பல புனை பெயர்களில் படைப்புகளை எழுதியுள்ளார்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளமானிப் பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகம் இலக்கியத்தில் முதுமானிப் பட்டமும் பெற்றவர்.
இலங்கை வானொலி செய்தி ஆசிரியராகவும் தமிழ் ஆங்கில அறிவிப்பாளராகவும் கடைமை ஆற்றியவர். மேலும் வீரகேசரி நவமணி பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் The Island, Daily News பத்திரிகைகளின் பண்பாட்டுப் பகுதி ஆசிரியராகவும் பணிபுரிந்தமை குறிப்பிடத் தக்கது.
மேலும் மாலைதீவு, ஓமான், அமெரிக்காவின் ஓஜையோ மாநிலத்தில் ஆங்கில ஆசிரியராகவும் யாழ் பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளராகவும் பணிபுரிந்த பெருமை பெற்றவர்.
மேலும் கம்பன் கழகம், ஒசி ஐசி, கொடகே போன்ற வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றவர். 1953 இற்கும் 2020 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இலக்கியம் சினிமா திறனாய்வு சம்பந்தமான 47 நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.
இவரது ஆற்றலைக் கௌரவித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஐவின்ஸ் தமிழ் இணையதளமும் அவரை வாழ்த்தி வணங்குகின்றது.
தொகுப்பு – பிரபா அன்பு