இன்று (08) யாழ்ப்பாண வணிகர் கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த யாழ்ப்பாண வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் யாழ்ப்பாணத்தில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் எனத்தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் நாட்டில் படிப்படியாக சில பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில நிறுவனங்கள் விநியோகத்தை மட்டுப்படுத்தியதன் காரணமாகப் பால் மா, எரிவாயு கொள்கலன் மற்றும் கோதுமை மா என்பவற்றுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.
கோதுமை மா விநியோகம் தற்போது சீராகிவருகிறது.
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்குத் தேவையான அளவு கோதுமை மா வெதுப்பகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கின்ற நேரத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
அரசாங்கம் உழுந்தைத் தடை செய்துள்ள நிலையில் எல்லோரும் உழுந்தை அதிகளவில் உற்பத்தி செய்ததால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.