மட்டக்களப்பு மாவட்டத்தில் பெயதுவரும் பலத்த மழை காரணமாக பல தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் பல வீடுகளுக்குள்ளும் நீர் பகுந்துள்ளதனால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், வீடுகளில் தங்க முடியாமல் அயல் அவஸ்த்தைப் படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, எருவில், உள்ளிட்ட தாழ் நிலப் பகுதிகளில் அமைந்துள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்பகுந்துள்ளதுடன் பல வீதிகளிலும் நீர் ஓடமுடியாமல் தேங்கிக்கிடப்பதனால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், உள்ளுர் போக்குவரத்துச் செய்வதிலும் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தேங்கிக்கிடக்கும் வெள்ளநீரை வெட்டி குளம், மற்றும் ஆற்றுப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை நடவடிக்கை எடுத்து புதன்கிழமை(05) மாலை ஜே.சி.பி. வாகனத்தின் மூலம், அடைபட்டுள்ள வடிகான்கள், குழாய்கள், மதகுகள் என்பனவற்றைத் திறந்துவிட்டு, நீர் விரைவாக வழிந்தோடுவதற்குரிய வாய்க்கால்களும், வெட்டிவிடப்பட்டன.
இதன்போது பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், மற்றும் உத்தியோகஸ்த்தர்கள், ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொண்டிருந்தனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் தாழ் நிலப் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை தாம் நேரடியாகச் சென்று பார்வையிட்டு பிரதேச சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் ஒன்றிணைந்து வெளியேற்றி வருவதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் இதன்போது தெரிவித்தார்.
செய்தியாளர் – சக்திவேல்