இந்தியாவில் உள்ள முதலாளி ஒருவர் தனக்குச் சொந்தமான 9 லட்சம் பங்குகளை தனது ஊழியர்களுக்கு நன்கொடையாகக் கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் இயங்கிவரும் IDFC First Bank எனும் வங்கியின் ஒரு பங்கு இன்றைய தேதிக்கு 43.9 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான வி.வைத்தியநாதன் தனது 9 லட்சம் பங்குகளை தன்னிடம் வேலைப்பார்த்து வரும் ஊழியருக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
அந்த வரிசையில் முதலில் இருப்பது அவருடைய பயிற்றுநர் ரமேஷ் ராஜுவ். இவருக்கு வைத்தியநாதன் 3 லட்சம் பங்குகளை கொடுத்துள்ளார். அடுத்ததாக வீட்டில் உதவியாளராக பணியாற்றி வரும் பிரஞ்சால் நர்வேக்கருக்கு 2 லட்சம் பங்குகளையும் கார் டிரைவர் அழகர் சாமிக்கு 2 லட்சம் பங்குகளையும் அலுவலக உதவியாளர் தீபக் பத்தாரேவுக்கு 1 லட்சம் பங்குகளையும் வீட்டு வேலைக்காரர் சந்தோஷ் ஜோகாலேவிற்கு 1 லட்சம் பங்குகளையும் கொடுத்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய 3.95 கோடி சொத்து மதிப்புள்ள பங்குகளையும் 5 ஊழியர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
மேலும் ருக்குமணி அறக்கட்டளைக்கு இவர் 2 லட்சம் பங்குகளை தானமாக கொடுத்திருப்பதாகவும் இதற்கு முன்பு கடந்த 2021 இல் 2.43 கோடி மதிப்புள்ள தனது 4.50 லட்சம் பங்குகளை தனது ஊழியர்கள் வீடு வாங்குவதற்காக அவர் வழங்கினார் என்றும் கூறப்படுகிறது. ஊழியர்களின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் வைத்தியநாதன் செய்திருக்கும் இந்தக் காரியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.