இலங்கைசெய்திகள்

மருந்து விஷமானதில் 11 வயது மாணவன் பலி!

death

சுகயீனம் காரணமாக தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் மருந்து பெற்றுக் கொண்ட 11 வயது சிறுவன் மருந்து விஷமானதில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பேருவளை – அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த பேருவளை வளதற கனிஷ்ட பாடசாலையில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் விதுஷ ரந்துனு என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி காய்ச்சல் காரணமாக பேருவளை அபேபிட்டிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் சிறுவன் சிகிச்சைப் பெற்றுக் கொண்டுள்ளான்.

அதன் பின்னர், ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக, சிறுவனின் பெற்றோர் சிறுவனை பேருவளை நகரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

குறித்த சிகிச்சைகளில் சிறுவன் குணமடையாத காரணத்தால் மீண்டும் முதலில் மருந்து எடுத்துக் கொண்ட மருத்துவரிடம் சிறுவனை பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனுக்கு மேலும் சில மருந்துகள் கொடுக்கப்பட்டதுடன் சிறுவனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, சிறுவனை பேருவளை முதன்மை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் சிறுவனை ஏற்க மறுத்த வைத்தியசாலை அதிகாரிகள், களுத்துறை போதனா பொது வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பின்னர் களுத்துறை போதனா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று (12) மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலை திறந்த தீர்ப்பை அறிவித்துள்ளதுடன் சிறுவனின் உடல் உறுப்புகளை இரசாயன பரிசோதகருக்கு அனுப்பி வைக்க வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், துரதிஷ்டவசமாக உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button