இலங்கைசெய்திகள்

கடற்படையினர் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கருத்து!!

Sri Lankan Navy

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைத் தடுப்பதற்காக, தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்தும், வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும், நேற்றைய தினம் ஐந்தாவது நாளாகவும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைத் தடுக்க கடற்படை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில், கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வாவிடம் எமது செய்திச் சேவை வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் பகுதிகள் தொடர்பான கண்காணிப்புகளின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் கடற்படை படகுகள் கண்காணிப்பில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், சில சில இடங்களில் அவர்கள் ஊடுருவ முடியும்.

இது கடற்படைக்கு அப்பால், இராஜதந்திர ரீதியிலான பிரச்சினையாகும் என்று கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவில், தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்ய, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய மத்திய அரசிடம் கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்லர் நேற்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு கச்சதீவு திருவிழாவில் தமிழக யாத்திரிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தமிழக மீனவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, கச்சதீவு திருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும்.

இந்த முயற்சி இரு நாட்டு மக்களிடையே நல்லுறவைப் பேணுவதை உறுதி செய்யும் என்று தான் நம்புவதாகவும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button